
திருப்பூர்
திருப்பூர் செல்லம் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வேண்டும், தீபம் பாலம் கட்டாததால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 56–வது வார்டுக்கு உட்பட்ட செல்லம்நகர், சின்னதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வேண்டும் என்றும், தீபம் பாலம் கட்டாததை கண்டித்தும் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் செல்லம்நகர் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு முன்னாள் அதிமுக கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமை வகித்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் காவல் உதவி ஆணையர் மணி, ஆய்வாளர் சக்திவேல், மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மத்திய காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியது:
“இந்தப் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. சுகாதார பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், முறையாக குடிநீர் வழங்கப்படுவது கிடையாது.
எனவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், செல்லம்நகர், கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர் பிரிவுப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை அகற்ற வேண்டும், தீபம் பாலம் கட்டாததை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டோம்’’ என்று கூறினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக. கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கூறியது:
“தீபம் பவுண்டேசன் சார்பில் தீபம் பாலம் மங்கலம் சாலை முதல் இராயபுரம் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் என கூறியதால், மக்களிடம் இருந்து ரூ.1½ கோடி வரை வசூல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ளோம்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் பாலம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகிற 22–ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூருக்கு வருகை தர உள்ளார். அவர் இந்த பாலம் கட்டுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடாத பட்சத்தில் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி மக்கள் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்’’ என்று கூறினார்.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.