
திருவாரூர்
விவசாய உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிப்பது போன்ற விவசாயப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அடுத்த மாதம் மாநாடு நடத்த முடிவு எடுத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு விவசாயச் சங்க ஒன்றியச் செயலர் ஆர்.சதாசிவம் தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், "பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களுக்கான மானியத்தை ரத்து செய்யக் கூடாது.
குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தி, பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 8 சென்ட் நிலம் வழங்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக அதிகரித்து, ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், "விவசாய உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
விவசாய இடுப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது.
அனைத்துப் பயிர்க் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு உடனடியாக அமைத்து காவிரிப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்" உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 8, 9-ஆம் தேதிகளில் மன்னார்குடியில் மாநாடு நடத்தி, அதில், இக்கோரிக்கைக்காக பிரச்சார இயக்கம், போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானிப்பது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் என்.மகேந்திரன், மாதர் சங்க ஒன்றியச் செயலர் பி.பாஸ்கரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.