
திருநெல்வேலி
இராணுவ அங்காடியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முன்னாள் இராணுவ வீரர்கள் திருநெல்வேலியில் ஊர்வலமாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்க செயலாளர் செல்லத்துரை தலைமையில் முன்னாள் இராணுவ வீரர்கள் திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு இருந்து நேற்று காலை ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த ஊர்வலம் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு நிறைவடைந்தது.
பின்னர் முன்னாள் இராணுவ வீரர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், "பாளையங்கோட்டையில் இராணுவ அங்காடி செயல்பட்டு வரும் நிலம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. வாடகை பிரச்சனை ஏற்பட்டதால் இராணுவ அங்காடியை நெல்லை அருகே தாழையூத்தில் உள்ள தனியார் நூற்பாலை கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்கின்றனர்.
வருகிற 5–ஆம் தேதி முதல் புதிய இடத்தில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதல் வாடகை செலவு ஏற்படும். மேலும், இராணுவ குடும்பத்தினர் பொருட்கள் வாங்குவதற்கு பல்வேறு வகையில் சிரமப்படுவார்கள்.
எனவே, இராணுவ அங்காடியை தாழையூத்து பகுதிக்கு இடமாற்றம் செய்யக் கூடாது. தொடர்ந்து அதே இடத்தில் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ன்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின்போது முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்கத் தலைவர் சிவணு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.