
திருநெல்வேலி
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
தேர்தல்களின்போது பணப் பட்டுவாடா செய்யப்படுவதை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக கொடுத்த நெருக்கடிகளைத் தாண்டி தினகரன் தனது ஆளுமையால் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததாகக் கூறுகிறார்கள். அப்படியானால் இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் பணப் பட்டுவாடா செய்யப்படவில்லையா?
தேர்தல்களில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். பணப் பட்டுவாடா, ஜனநாயக அமைப்பையும், இறையாண்மையையும் அழித்துவிடும்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை. ஆளுநரின் தலையீடு அதிகரித்துள்ளது.
வறட்சி, புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெறும் வலிமை தமிழக அரசுக்கு இல்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் மூலம் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை முதல்வரும், துணை முதல்வரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பாஜகவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் மத்தியில் பாஜக ஆட்சியிருந்தும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள்கூட, பாஜக வேட்பாளருக்கு கிடைக்கவில்லை.
வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் நீண்ட நாள்களாக நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
எனவே, சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைகள் மிக மோசமாக காணப்படுகின்றன. எனவே, இங்கு சாலைகளை அமைக்கவும், ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.