பெற்றோரை இழந்து தவிக்கும் 2ம் வகுப்பு மாணவன்! ரூ.5 லட்சம் வைப்பீடு மட்டுமல்ல! மாதம் ரூ.4000! முதல்வர் ஸ்டாலின்

By vinoth kumar  |  First Published Jun 22, 2024, 7:20 AM IST

தென்காசி மாவட்டம் இலத்தூர் விலக்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2ம் வகுப்பு மாணவன் சர்வேஸ்வரனின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2ம் வகுப்பு மாணவன் சர்வேஸ்வரனின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், இலத்தூர் விலக்கு அருகில் கடந்த 13.06.2024 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தென்காசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும், கொல்லத்திலிருந்து திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை நோக்கி வந்துகொண்டிருந்த லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கொடிக்குறிச்சி கிராமம், சிவராமபேட்டையைச் சேர்ந்த அழகுசுந்தரி (32) க/பெ.(லேட்) மாரித்துரை மற்றும் அவரது மகன் சிறுவன் அக்ஷய பாலன் (3) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: நான் ஓடி ஒளிபவன் அல்ல; முதல்வர் என்ற முறையில் பொறுப்புடன் பதில் அளிக்கிறேன் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

இவ்விபத்தில் உயிரிழந்த அழகுசுந்தரி அவர்களின் கணவர் மாரித்துரை என்பவர் கடந்த 21.09.2021 அன்று காலமாவிட்டார் என்றும், இந்த விபத்தில் தற்போது தாய் அழகுசுந்தரியையும் இழந்து அவர்களது மூத்த மகன் சிறுவன் சர்வேஸ்வரன் பெற்றோர் இருவரையும் இழந்து வாடுகிறான் என்பதை அறிந்து பெரிதும் வருந்தினேன். இந்த விபத்தில், உயிரிழந்த அழகுசுந்தரி மற்றும் சிறுவன் அக்ஷயபாலன் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுவன் சர்வேஸ்வரனின் பெயரில் ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வைப்பீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். 

இதையும் படிங்க: Kallakurichi : விஷச்சாராய மரணம்.. தமிழக அரசு ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? நீதிபதிகள் சரமாரி கேள்வி

மேலும், தனது தாய்வழிப் பாட்டியின் பாதுகாப்பில் தற்போது இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சர்வேஸ்வரனின் பராமரிப்பிற்காக சமூக நலத்துறையின் மூலம் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4,000 வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சிறுவனது எதிர்கால நலன் கருதி மாவட்ட சமூகநலத் துறையின் மூலம் இச்சிறுவன் முறையாகக் கல்வி பயில்வது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

click me!