
விருதுநகர்
2022-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலையை உருவாக்க அரசு பாடுபட்டு வருகிறது" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஆர்.பரமசிவன் தெரிவித்தார்.
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்பில் "தற்போது உயிர் தொழில் நுட்பவியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைப்பெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை தாங்கினார். கருத்தரங்கினை தொடக்கி வைத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆர்.பரமசிவன் பேசியது:
"டெங்கு காய்ச்சல் என்பது கொசு கடித்து 4 முதல் 9 நாள்களுக்குள் பாதிப்பு தெரிய வரும். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த டெங்கு காய்ச்சல் கொசு, தற்போது இந்தியா உள்பட 100 வெப்ப நாடுகளில் பரவி விட்டது. இந்த காய்ச்சல் வராமல் இருக்க கொசுக் கடியிலிருந்து தப்பிப்பதே வழி ஆகும்.
தூங்கும்போது கொசு வலையை பயன்படுத்த வேண்டும். வாசனை சோப்பு, வாசனை திரவியம் பயன்படுத்தினால் கொசு அதிகமாக நம்மை கடிக்கும். கொசு உற்பத்தியைத் தடுக்க தேங்கியுள்ள தண்ணீரில் மருந்து தெளிக்க வேண்டும். அல்லது தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் நீர்சத்து பானங்களை பருக வேண்டும். பப்பாளி இலைச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அதை அருந்த வேண்டும். நிலவேம்பு கசாயமும் அருந்தலாம். தினசரி இரவு பாலில் மஞ்சள் தூள், மிளகுத் தூள் கலந்து அருந்த வேண்டும்.
தற்போது பல நாடுகளில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2011-ல் 14 ஆயிரத்து 927 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 2017-ல் 4 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2022-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலையை உருவாக்க அரசு பாடுபட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் விஞ்ஞானி எம்.முனியராஜ், பேராசிரியர் எஸ்.சுரேஷ்குமார், ராஜஸ்தான் பல்கலைக் கழக பேராசிரியர் சுதீப் உள்ளிட்டோர் பேசினர். முதல்வர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். பேராசிரியர் ராஜேஷ்வரி நன்றி தெரிவித்தார்.