
விழுப்புரம்
பள்ளி, கல்லூரிகளில் வகுப்பறைத் தண்டனையை ஒழிப்பதற்கான ஆசிரியர்கள், பெற்றோர்களின் கருத்தறியும் கூட்டங்களை அரசு நடத்த வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த வகுப்பறை தண்டனைகளைத் தவிர்ப்பது குறித்த கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் தாய்த் தமிழ்ப் பள்ளி சார்பில், தமிழகப் பள்ளிகளில் நிலவும் வகுப்பறை தண்டனைகளைத் தவிர்ப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சென்னையைச் சேர்ந்த குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம் ஸ்ரீதர், நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இரா.உஷா, நெய்வேலி தமிழ்ச் சங்க ஆசிரியர் வே.சுபச்சந்திரன், விழுப்புரம் வாழை அமைப்பு முகுந்தன்,
புனித அன்னாள் சபை சகோதரி பௌலி, திண்டிவனம் தாய்த் தமிழ் பள்ளி முருகப்பன், விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த.பாலு, நூறு பூக்கள் அறக்கட்டளை பேராசிரியர் த.பழமலய், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் பிரபா.கல்விமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், "விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த.பாலு, தனது பணிக்காலத்தில் வகுப்பறை தண்டனைகளைத் தவிர்ப்பதற்கும், மாணவர் முன்னேற்றத்துக்கும் முயற்சித்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
வகுப்பறைத் தண்டனைக்கு எதிராக உள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலம் வகுப்பறைத் தண்டனைக்கான சூழல்களையும், அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவது.
மாநில அளவில் இதுபோன்று முயற்சிகள் மேற்கொண்டுவரும் ஆசிரியர்களைக் கண்டறிந்து, அவர்களின் அனுபவங்களை ஒரு தொகுப்பாக வெளிக்கொணர்வது.
வகுப்பறைத் தண்டனையை ஒழிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்தறியும் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது.
தொடக்க நிலை, இடை நிலை, மேல் நிலை மற்றும் கல்லூரி அளவில் வகுப்பறைத் தண்டனைகளை முற்றிலும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வலியுறுத்துவது,
அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த அரசை வலியுறுத்துவது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.