கள்ளக்குறிச்சியில் எஞ்சி உள்ளவர்கள் பிழைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நடந்த தவறை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இறந்தோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விற்போரை அரசு ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை அரசாங்கம் எடுக்கும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் செய்தியாளரை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு: கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி உள்ளனர். நாங்கள் வரும்பொழுதே மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு என்னென்ன சிகிச்சைகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எல்லாவற்றையும் விசாரித்தோம். நாங்கள் மருத்துவர்களிடம் கேட்கின்ற பொழுது 9 பேர் அபாய நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் ஸ்டேபிளாக உள்ளார்கள். எப்படியும் எல்லாரையும் காப்பாற்றி விடலாம் என தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Kallakurichi Tragedy:விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 32ஆக உயர்வு! கண்ணீரில் மிதக்கும் கள்ளக்குறிச்சி
அரசை பொறுத்தவரை எல்லா நடவடிக்கையும் அரசு எடுத்திருக்கிறது. அதேநேரத்தில் மெத்தனமாக செயல்பட்டதால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட இதில் ஈடுபட்டுள்ள மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் 10 பேரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மருத்துவர்கள் தேவை என்றால் அனுப்பி வைப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பெட்டுகளிலும் இரண்டு டாக்டர்கள் இரண்டு, செவிலியர்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
எஞ்சி உள்ளவர்கள் பிழைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நடந்த தவறை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இறந்தோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்போரை அரசு ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை அரசாங்கம் எடுக்கும் என்றார்.