
நேற்று தூத்துக்குடியில் நடை பெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது , அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை, தற்போது 12 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் காயம்டைந்த பலரின் நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நேற்று ஸ்டெர்லைட் போராட்டம் நூறாவது நாளை எட்டியிருந்தது. அறவழியில் இத்தனை நாட்களும் போராட்டம் நடத்திய மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அமைதி வழியிலேயே போராட முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி, போராட்டக்குழுவினர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்கியது காவல் துறை.
3 பெண்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தால் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவத்தில் பலியானோர் விவரம் பின்வருமாறு.
ஜெயராம் உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்),கிளாஸ்டன் (லூர்தம்மாள்புரம்) தூத்துக்குடி, கந்தையா (சிலோன் காலனி) தூத்துக்குடி, வெனிஸ்டா 17 வயது மாணவி தூத்துக்குடி, தமிழரசன் புரட்சிகர இளைஞர் முன்னணி-( குறுக்கு சாலை) தூத்துக்குடி, சண்முகம் (மாசிலா மணி புரம்) தூத்துக்குடி, அந்தோனி செல்வராஜ் தூத்துக்குடி, மணிராஜ் தூத்துக்குடி, வினிதா தூத்துக்குடி.
இதில் வெனிஸ்டா எனும் 17 வயது மாணவி, போராட்டத்தின் போது முழக்கமிட்டார் என்பதற்காக வாயை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு, துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டிருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் பெரும்பாலும், இதயம் மற்றும் தலைப்பகுதியை குறிவைத்தே சுடப்பட்டிருக்கின்றனர்.
பொது மக்களுக்காகத்தான் அரசாங்கம், ஆனால் இங்கோ நிலமையே தலைகீழாக இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்கள் உயிரை அரசே பறித்திருக்கு இந்த கொடூரச்சம்பவம் குறித்து, அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.