வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் 6 ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் கூறியிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் மே 6 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாகவும் அதில் இருந்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: பத்ம விருது பெற்ற துளசி கவுடா, சுக்ரி பொம்மகவுடாவிடம் ஆசி பெறும் பிரதமர் மோடி... இணையத்தில் வீடியோ வைரல்!!
இந்த நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மே 7 ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, மே.8 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறுதி சடங்குக்கு பணம் இல்லாததால் தந்தையின் உடலை மலையில் விட்டு சென்ற மகன்.. அதிர்ச்சி சம்பவம்
இந்திய வானிலை மையம் வங்காள விரிகுடாவில் உள்ள அமைப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் சூறாவளிக்கு சைக்ளோன் மோச்சா என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி இடையூறு காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று மே 7 ஆம் தேதி வீசக்கூடும் என்றும்m வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை கூட அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மீனவர்கள், மே.7 முதல் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிகளில் ஏற்கனவே உள்ளவர்கள் மே.7 ஆம் தேதிக்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.