
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் டிட்வா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் சென்னையை நோக்கி நெருங்கி வரும் நிலையில், இதன் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
29 மற்றும் 30-ஆம் தேதிகளில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசு துறைகளும், குறிப்பாக வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மீன்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முதலவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவு
தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைத்திடவும், மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அங்கு முறையாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பேரிடர் நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அமைச்சர்களும் களத்துக்கு செல்ல வேண்டும்
மேலும் அமைச்சர்களும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.