
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,” பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. சென்னையில் கடந்த மாதங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50க்கும் கீழ் பதிவாகி இருந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை பொதுமக்கள் வசிக்கும் இடங்களாக குறிப்பிட்டுள்ள 22 இடங்களில் கொரோனா பாதிப்பு 2,3 என்ற அளவில் பரவியுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரானா மிக வேகமாக பரவி வருகிறது என்று அமைச்சர் கூறினார்.
பன்னாட்டு விமான நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உடல் வெப்பநிலையை கண்காணிக்க கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. முகம், கை, கால்களில் புண் மற்றும் கொப்புளம் இருந்தால் அவர்களுடைய மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. சென்னையில் ஒருவருக்கு முகத்தில் வித்தியாசமான கொப்பளங்கள் இருந்ததால் அது ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் அவருக்கு குரங்கம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தினந்தோறும் 15,000 பேருக்கு மேலாக கொரானா பரிசோதனை எடுக்கப்படும் நிலையில் தற்போது இரண்டு சதவீதம் அளவுக்கு கொரான பாதிப்புகள் உள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இல்லை என்று அவர் கூறினார். பின்னர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இன்னும் இரண்டு மாதத்தில் மருத்துவமனையின் டிசைன் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மருத்துவமனையில் வடிவமைப்பு கிடைக்கப் பெற்றதும் அதற்கு அனுமதி பெறப்பட்டு டெண்டர் கோரப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் படிக்க: TN Schools Reopen : தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு! - வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு!!