மதுரை அருகே கொரோனா பால் தற்போது பிரபலமடைந்து வருகிறது.
மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே சாயா கருப்பட்டி காபி என்ற கடையில் கொரோனா பால் தற்போது வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் சாலமோன் ராஜ் கூறுகையில், ‘கருப்பட்டியை மூலப்பொருளாக வைத்து, காபி, தேநீர், பால் என விற்பனை செய்து வருகிறோம். இது நமது பாரம்பரியமான முறையாகும். சீனி பயன்படுத்தும் நடைமுறை மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றாகும்.
ஆனால், அது நமது உடலுக்கு கேடு விளைவிக்கிறது. ஆனால், பனங்கருப்பட்டியானது, நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கக்கூடியது. அதனால் இங்கு காபி, பால் மற்றும் தேநீர் ஆகியவற்றுக்கு கருப்பட்டியையும், நாட்டுச் சக்கரையையும் பயன்படுத்துகிறோம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.
கொரோனா காலம் என்பதால், கொரோனா பால் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். பாலில், மிளகு, மஞ்சள்தூள், சுக்கு ஆகியவற்றுடன் கருப்பட்டியையும் கலந்து விற்பனை செய்கிறோம். இதனை மக்கள் வெகுவாக விரும்பி அருந்துகின்றனர். இது தவிர காலையும் மாலையும் பல்வேறு வகையான பயறு வகைகளையும் விற்பனை செய்கிறோம்.
கடலை எண்ணெயில் பொறிக்கப்பட்ட உளுந்தவடையையம் விற்பனைக்கு உள்ளது. மக்களுக்கு நியாயமான விலையில், ஆரோக்கியமான பொருளை விற்பனைக்குத் தருகிறோம் என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி' என்கிறார். மிகச் சிறிய கடைதான் என்றாலும், அச்சம்பத்து பகுதியைக் கடந்து செல்கின்ற நபர்கள் பெரும்பாலும் இதன் கருப்பட்டி காபியை மட்டுமன்றி கொரோனா பாலையும் ஒருமுறை ருசித்துவிட்டே செல்கின்றனர்.இந்த கொரோனா பால் மதுரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.