
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, “தமிழகத்தில் பட்டியலின மக்கள் காலணி அணிந்து, சில தெருக்கள் வழியாக செல்லும் போது தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஒரு பள்ளியில் தலித்துகளை தனிமைபடுத்த சிறிய சுவர் எழுப்பி உள்ளனர். நான் அந்த பள்ளிக்கு வருகிறேன் என்றதும் அந்த சுவர்கள் அவசர அவசரமாக இடித்து தள்ளப்பட்டன. தமிழக மக்கள் சனாதன சிந்தனைகளில் திளைத்தவர்கள். நமது நாட்டின் அடித்தளம் சனாதனம் தான்” என்று தெரிவத்தார்.
இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். அந்த வகையில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி ஆளுநர் தான். ஆளுநர் இதற்கு முன்பு பணியாற்றிய அனைத்து பகுதிகளும் தீவிரவாதிகள் நிறைந்த பகுதி அதே போன்று இங்கும் நடக்காதா என எதிர்பார்க்கிறார்.
தமிழகத்தில் தீவிரவாதமும் இல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லை. நமது மாநிலத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். முதல்வர் பாதுகாப்பான ஆட்சியை நடத்துகிறார். மேலும் தமிழகத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடாதா என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார்” என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் ஒரே ஒரு தீவிரவாதி ஆளுநர் தான் என அப்பாவு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.