A.N.S Prasad : பிரதமர் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசியதற்கு, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் கடந்த 22- ம் தேதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பேசிய, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "சேலம் மாநாட்டில் பிரதமர் மோடி காமராஜரை புகழ்ந்து பேசினார். காமராஜருக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்?" பேசிக் கொண்டு வந்தவர் பெண்களை தரக்குறைவாக தாக்கி பேசும் அருவெறுக்கத்தக்க வார்த்தையால் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
140 கோடி மக்கள் தொகை வாழும் இந்திய நாட்டின் பிரதமரை, உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவரை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். அரசியல் எதிரிகளை விமர்சிக்க இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்த வார்த்தையை யாரும் பயன்படுத்தியதில்லை. இது மன்னிக்கவே முடியாத படுபாதகச் செயல். எனவே, அனிதா ராதாகிருஷ்ணனை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நீக்க வேண்டும். தனது அமைச்சரின் படுமோசமான பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு.. தொடர்ந்து கள்ளமௌனம் காக்கும் திமுக - விளாசும் பாஜக தலைவர் அண்ணாமலை!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, இனி இதுபோன்று யாரும் பேசவே கூடாது என்கிற அளவுக்கு இருக்க வேண்டும்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி அவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசும்போது, திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி திமுக வேட்பாளருமான கனிமொழி மேடையில் அமர்ந்திருந்தார். அரசியலில் கண்ணியம், கட்டுப்பாடு பற்றி அடுத்தவர்களுக்கு பாடம் எடுப்பதில் கனிமொழி வல்லவர். ஆனால், பிரதமர் மோடியை அருவருக்கத்தக்க வகையில் பேசும்போது அதனை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு கனிமொழியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் எ.என்.எஸ்.பிரசாத்.