நாடாளுமன்ற தேர்தல் பணி... தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வைத்த முக்கிய கோரிக்கை என்ன.?

By Ajmal KhanFirst Published Oct 25, 2023, 4:07 PM IST
Highlights

தமிழகத்தில் வருகின்ற 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிட உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் வரும் 27 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதை தொடர்ந்து நவம்பர் 4,5, மற்றும் 18,19 தேதிகளில் வாக்காளர் பட்டியில் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Latest Videos

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைமை நிலையச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கின்ற பூத் லெவல் ஏஜென்ட் , பூத் லெவல் ஆபிஸர் இவர்களுக்குள்ளே ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் அந்த அதிகாரிகள் போதுமான பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தேர்தல் அதிகாரிகளாக செல்லும் பெண்களுக்கு போதுமான சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த ஆண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களில் 30% பேர் மட்டுமே பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது திருப்தி அளிக்கவில்லை எனவும், 18 வயது நிறைந்தவர்கள் 100% பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை மட்டுமே நம்பாமல் தேர்தல் ஆணையமும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தி 100% பேரை வாக்காளர் பட்டியலில் இணைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் சந்திர மோகன் பேசுகையில், வாக்குப்பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், பெண்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு மையங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேசிய ஸ்டெல்லா,  கள்ள ஓட்டை தவிர்க்க கைரேகை கொண்டு வாக்களிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும், பள்ளி கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

click me!