Latest Videos

Vikravandi : சூடு பிடிக்காத விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! காரணம் என்ன.? களத்தில் எத்தனை பேர் போட்டி தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Jun 24, 2024, 8:02 AM IST
Highlights

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து அரசியல் கட்சிகள் நிம்மதி மூச்சு விட்ட அடுத்த நொடியே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளது. அந்த வகையில், முதல் ஆளாக திமுக வேட்பாளரை அறிவித்தது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்தது. பாஜக கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில்,

பாமகவின் வன்னியர் வாக்கு வங்கி அதிகமுள்ள விக்கிரவாண்டியில் பாமக களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக சார்பாக யாரை களத்தில் இறக்குவார்கள் என்ற ஆவல் இருந்த நிலையில், இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தால் தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை அதிமுக அறிவித்து அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது.

RAIN ALERT : 5 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை.! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?

 

தேர்தல் களத்தில் எத்தனை பேர்.?

இந்த நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த கட்சியின் சார்பாக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். நேற்றைய தினத்தோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. தற்போது வரை திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 64 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். இன்று பரிசீலனை முடிவடைந்து இறுதி வேட்பாளர்கள் விவரம் இன்று பிற்பகல் தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது. இடைத்தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடு பிடிக்காமல் அமைதியாகவே காட்சியளித்தது.

தேர்தலை புறக்கணித்த அதிமுக

தேர்தலில் வெற்றிபெற திமுக சார்பாக தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டது. இதே போல பாமக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கியது. ஆனால் மக்களின் பார்வை முழுவதும் கள்ளக்குறிச்சியை நோக்கி இருந்ததால் விக்கிரவாண்டி தேர்தல் மந்ததாக காட்சி அளித்தது. மேலும் திமுக- அதிமுக என்ற போட்டியை அணைவரும் எதிர்பார்த்த நிலையில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக விலகியது இன்னும் தேர்தல் களத்தை அமைதியடைய செய்துள்ளது. எனவே இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை விட எந்த கட்சி 2வது மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் பிரச்சாரம் தீவிரமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்தது... முக்கிய குற்றவாளிகள் 2 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி


 

click me!