ஒரு பிரதமர் இப்படியா பேசுவது? தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்க மோடி! இறங்கி அடிக்கும் காங்கிரஸ்!

Published : Oct 31, 2025, 02:36 PM IST
PM Modi and Selvaperunthagai

சுருக்கம்

தமிழர்களை அவமானப்படுத்திய பிரதமர் மோடி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அங்கு பிரசாரம் மேற்கொண்டு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் திமுக தலைவர்கள் பீகாரிகளை துன்படுத்துகின்றனர் என்று பரபரப்பு குற்றம்சாட்டினார்.

தமிழர்களை அவமானப்படுத்தினாரா பிரதமர் மோடி?

''காங்கிரஸின் கூட்டணியில் உள்ள திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், வேலைக்காகச் சென்றுள்ள பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுகின்றனர், தவறாக நடத்தப்படுகின்றனர்'' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பிரதமர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ''இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.

மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

ஜனநாயக கொள்கைக்கு எதிரானது

ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை பழித்துக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது. தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்.

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெற்று, தமிழர்களிடம் தனது பேச்சுக் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரிவினை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மாநிலங்களின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பிரதமர் செயல்பட வேண்டும். தமிழர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்தவித செயலும், எந்தவித கருத்தும் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?