
Tamil Nadu paddy procurement scam : தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகள் மற்றும் அரவை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரவை நிலையங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லவும்,
அவை அரிசியாக்கப்பட்ட பிறகு வட்ட கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்லவும் சரக்குந்துகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப் படுகின்றன. 2024-25ஆம் ஆண்டில் மட்டும் இந்தப் பணிக்காக 3200 சரக்குந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக ஒவ்வொரு சரக்குந்துக்கும் வழங்கப்பட்ட வாடகையை விட 321% கூடுதலான தொகை இதற்கான ஒப்பந்தத்தை பெற்ற 3 சரக்குந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.
நெல் மூட்டைகளை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. முருகா எண்டர்பிரைசஸ், கந்தசாமி அண்ட் கோ, கார்த்திகேயா எண்டர்பிரைசஸ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் ஒப்பந்த விதிகளை தமிழக அரசு மாற்றி அமைத்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை பெறும் நிறுவனங்கள் அவற்றிடம் உள்ள சரக்குந்துகளை மட்டுமே பயன்படுத்தி, கொள்முதல் நிலையங்களில் சேரும் நெல் மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். ஆனால், ஒப்பந்தம் பெற்ற 3 நிறுவனங்களும் வேறு 19 சரக்குந்து நிறுவனங்களுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.165 கோடியை சுருட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துடன் 3 நிறுவனங்களும் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி ஒரு டன் நெல்லை 8 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்ல ரூ.598 வழங்கப்படும். ஆனால், உள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் சரக்குந்துகளுக்கு 8 கி.மீ தொலைவுக்கு ரூ.186 மட்டும் வழங்கும் அந்த 3 நிறுவனங்களும் மீதமுள்ள 412 ரூபாயை சுருட்டிக் கொள்கின்றன என்று சரக்குந்து உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான சரக்குந்து மூலம் 32.7 டன் நெல் மூட்டைகள் 8 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்கான வாடகையாக ரூ.19,555-ஐ அரசிடமிருந்து பெற்றுக் கொண்ட கார்த்திகேயா எண்டர்பிரைசஸ் நிறுவனம், அதில் ரூ.6080-ஐ மட்டும் தமக்கு வழங்கி விட்டு, மீதமுள்ள ரூ.13,474-ஐ சுருட்டிக் கொண்டதாக வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நெல் மூட்டைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சரக்குந்துகளுக்கு இதே தொகை தான் வழங்கப்பட்டுள்ளது. ஒரு டன்னுக்கு ரூ.412 சுருட்டப்பட்டால், கடந்த ஆண்டில் கொண்டு செல்லப்பட்ட 40 லட்சம் டன்னுக்கு ரூ.164.80 கோடியை முறைகேடாக திமுக அரசு கொட்டிக் கொடுத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்திருக்கிறது.
சந்தையில் ஒரு டன் நெல்லை 8 கி.மீ கொண்டு செல்வதற்கு உள்ளூர் சரக்குந்துகள் அதிகபட்சமாக ரூ.143 மட்டும் தான் வசூலிக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஒரு டன்னுக்கு ரூ.598 வழங்கும் வகையில் 3 சரக்குந்து நிறுவனங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்பதால், இதன் பின்னணியில் ஒப்பந்தம் பெற்ற சரக்குந்து நிறுவனங்களுக்கும், தமிழக ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கும் இடையே கூட்டுச் சதி நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன.
இப்போது ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்கள் தவிர வேறு எந்த நிறுவனமும் இந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்க முடியாத அளவுக்கு விதிகள் திருத்தப்பட்டதாகவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க இந்திய உணவுக்கழகத்தின் தென்னிந்திய இயக்குனர் மறுத்து விட்ட நிலையில், அவரை விடுப்பில் செல்ல வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவருக்கு அடுத்த அதிகாரியான துணை இயக்குனரை வைத்து ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில் கூட்டுச் சதி நடந்திருப்பதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன.
திமுக என்றாலே விஞ்ஞான ஊழல் தான் என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசின் ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி வருகின்றன. சரக்குந்துகளுக்கு ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் போக்குவரத்து ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பின்னணியில் உள்ள உண்மைகளையும், கூட்டுச் சதியையும் வெளிக்கொண்டு வரும் வகையில் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.