ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக என அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் நீக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகவும், வட சென்னை பகுதியில் முக்கிய அரசியல் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், இவரை கடந்த ஜூலை 5ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காவல்நிலையில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பல பக்கமும் நீண்டது. இந்த கொலையில் பல முக்கிய ரவுடிகள் ஈடுபட்டது தெரியவந்தது. கூலிப்படைக்கு பல கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
Armstrong murder : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் கைது - யார் இவர்.?
காங்கிரஸ் பிரமுகர் கைது
இந்தநிலையில் தான் திமுக வழக்கறிஞர் அருள், அதிமுக மலர்கொடி, ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை என் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அப்போமு முன் விரோதம் காரணமாக கொலை செய்ய பணம் கொடுக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும் காங்கிரஸ் பிரமுகருமான அஸ்வத்தமனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து அஸ்வத்தமன் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முதன்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்.அஸ்வதாமன் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என்பதை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராகவும் ,முரணாக செயல்பட்ட காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை பேணுவதில் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.