நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக நாளை மறுதினம் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஒத்திவைத்துள்ளார்.
அதிமுகவில் அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கேள்வி கை நழுவி சென்று கொண்டுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் மீண்டும் ஒன்றினைந்தால் தான் வெற்றி பெற முடியும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை ஆகியோரை ஒன்றிணைக்க வாய்ப்பு இல்லை என விடாப்படியாக தெரிவித்து வருகிறார். இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது மட்டுமில்லாமல் 39 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
மீண்டும் ஒருங்கிணைப்பு
இதனையடுத்து மீண்டும் பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கவும், தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்க வருகிற 9ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 9.8.2024 - வெள்ளிக் கிழமையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்க இது தான் காரணமா.?
இந்தநிலையில் தற்போது 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளதை அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு மாவட்டத்தில் உள்ள மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆடி வெள்ளி தினம் என்பதால் மற்றொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.