இன்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!

By Manikanda PrabuFirst Published Mar 18, 2024, 10:50 AM IST
Highlights

மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளனர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என இந்த முறை மும்முனை போட்டி நிலவவுள்ளது. அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதன்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

Latest Videos

இதில், மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வழியாக இரு புதிய ரயில்கள்: ரயில்வே வாரியத்திற்கு சு.வென்கடேசன் எம்.பி. நன்றி!

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளனர் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அதில், வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன் முடிவில், இன்று மாலை 4 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்திக்கும் மாநிலச் செயலாளர் முத்தரசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளார்.

முன்னதாக, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!