
திருச்சி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கட்டிடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, ஆட்சியரிடம் மனு கொடுத்தபோது, ஆட்சியர் அதனை வாங்கவில்லை. அதனால், நாங்கள் பிரதமருக்கே நேரடியாக அனுப்பிக்கிறோம் என்று கட்டிடத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“நல வாரிய நிதியை விரயமாக்க கூடாது,
60 வயதான அனைத்து கட்டிடத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
கட்டிடத் தொழிலாளர் விபத்தில் இறந்தால் ரூ.10 இலட்சமும், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.5 இலட்சமும் வழங்க வேண்டும்,
பெண் கட்டிடத் தொழிலாளர்களுக்கு பிரசவ கால விடுப்புடன் 6 மாத சம்பளம் வழங்க வேண்டும்,
திருவரங்கம் தாலுகாவைச் சேர்ந்த 251 கட்டுமான அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு துரைக்குடி ஊராட்சியில் ஒதுக்கீடு செய்த வீட்டுமனை இலவச பட்டாவை உடனே வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
மாநிலத் துணை தலைவர் சுரேஷ், திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் மணி, கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் இவர்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர். ஆனால், அந்த மனுவை ஆட்சியர் வாங்க மறுத்துவிட்டார். ஏனெனில், அப்போது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை ஆட்சியர் பழனிசாமி நடத்திக் கொண்டிருந்தாராம். அதனால்தான் வாங்கவில்லையாம்.
அதனால், “நாங்கள் கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக அனுப்பிக் கொள்கிறோம்” என்று கட்டிடத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.