
நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளன. இதற்காக 43 ஆயிரத்து 51 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்படும்.
தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.