
அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா. வயிற்று வலி காரணமாக, அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆட்சியர் லட்சுமி பிரியாவுக்கு வெற்றிகரமாக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியரே அறுவை சிகிச்சை மேற்கொண்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தகப்பனாரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இதேபோல் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆட்சியர் லட்சுமி பிரியா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ஆட்சியர் லட்சுமி பிரபா இன்று வீடு திரும்பினார்.