
தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பிரபாகர். இவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதில், திருநெல்வேலி மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்கள் சில, தங்களின் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி ஆற்றையே நம்பி உள்ளனர். மேலும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய பாசனத்திற்கும் தாமிரபரணி ஆற்றையே மலைபோல் நம்பி உள்ளனர்.
இந்நிலையில், பெப்சி, கோலா உள்ளிட்ட குளிர்பான ஆலைகள் தங்களின் தேவைகளுக்காக,தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்து வருகின்றனர். இதனால், தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி வரும். இதனால், இந்த குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த மதுரை நீதிமன்றம் பெப்சி, கோலா ஆகிய குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அறிவித்தனர். நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்களும், தன்னார்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.