
கீழ்ப்பாக்கத்தில் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி, எஸ்.பி.ஐ., வங்கி மேலாளருக்கு திருவோடு அளித்து போராட்டம் நடத்திய, ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி கடந்த வாரம் பெருமதிப்புடைய நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களில், நிதிநிலைமையை சீர் செய்வதற்காக எனக்கூறி விஜய் மல்லையா உள்ளிட்ட பெரும் பணக்காரர்களின் 7200 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், கீழ்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் மேலாளருக்கு திருவோடு கொடுக்கும் போராட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மல்லையாவின் கடனை ரத்து செய்தது போல, மாணவர்களின் கல்விக்கடனையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், மல்லையா உள்ளிட்ட பல பெரும் பணக்காரர்களின் கடனை ரத்து செய்ததால் வங்கிகள் பணம் இல்லாமல் தவிக்கின்றன. அதனால்தான், வங்கி நிர்வாகத்திற்கு திருவோடு அளித்தோம். மேலும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், வங்கி நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் போரட்டக்கார்களை கைது செய்தனர்.