வேகமெடுக்கும் கோவை பள்ளி மாணவி 'தற்கொலை' விவகாரம்... விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் "விரைவில்" தாக்கல்

By manimegalai aFirst Published Nov 22, 2021, 11:29 AM IST
Highlights

கோவை பள்ளி மாணவி 'தற்கொலை' விவகாரத்தில் விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால், அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் 17 வயது பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31 பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடந்த, 11ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர். மாணவி பாலியல் தொந்தரவு குறித்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் அவரும்  போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 13 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளதாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாநில உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் கோவையில் கடந்த வாரம் முழுவதும்  விசாரணை நடத்தினர்.  இதில் மாணவியின் பெற்றோர், நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர்  பேசும் போது,  ‘குழந்தையின் பெற்றோர், காவல் ஆய்வாளர், ஏ.டி.எஸ்.பி என மொத்தம் 13 பேரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை விவரங்களை தற்போது வெளியிடமுடியாது. இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும்’ என்றார்.

இதேபோல, தற்போது கோவை  மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் தங்களது ஆய்வை முழுமையாக முடித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மாணவி தற்கொலை குறித்த ஆய்வு அறிக்கை மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மாணவி சம்மந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர், தலைமையாசிரியர்கள், பள்ளி செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி கூறிய முதன்மை கல்வி அதிகாரி கீதா, ‘அறிக்கை பள்ளி கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

பள்ளியில் முறையாக பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கைதான ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி டி.சி வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும், பதிவேடுகளில் பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்’ என்று கூறினார். மாநில உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசிடம் விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே கூடிய விரைவில் இந்த வழக்கு இன்னும் வேகமெடுக்கும் என்று அரசு தெரிவிக்கின்றனர்.

 

click me!