தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை… பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

By Narendran SFirst Published Feb 28, 2022, 4:30 PM IST
Highlights

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் இந்தியப் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விழைவதாகத் தெரிவித்துள்ளார்.  நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் தங்களது இயந்திர மீன்பிடிக் கப்பலில் கடந்த 24 ஆம் தேதி அதிகாலையில் பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள மயிலாட்டி தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதேபோன்று, கடந்த 26 ஆம் தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் கடந்த 27 ஆம் தேதி அதிகாலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையிலுள்ள கிராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் குறுகிய கால கட்டங்களில் தொடர்ந்து இதுபோன்று எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளும், கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் இந்த நிலை தொடர்வதாகத் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் வகையிலான இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடி, நேரடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று தனது கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!