அமெரிக்க வரி விதிப்பால் சிக்கலில் தமிழகத்தின் ஏற்றுமதித்துறை.. பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Published : Dec 18, 2025, 08:41 AM IST
Mk Stalin

சுருக்கம்

இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைந்து களைந்திட வேண்டுமென வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதித் துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து அவசரமாகவும், கவலையோடும் இதனை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை ஏற்றுமதியின் அடித்தளமாக விளங்குகிறது என்றும், நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 28 விழுக்காடு அளவிற்குப் பங்களிப்பினை வழங்குவதுடன், சுமார் 75 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணி ஏற்றுமதியிலும் 40 விழுக்காடு அளவிற்கு முக்கியப் பங்காற்றி, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.15000 கோடி இழப்பு

அமெரிக்க வரிவிதிப்பினால் தற்போது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடு என்பது வெறும் பொருளாதாரப் பின்னடைவு மட்டுமல்ல; ஈடுசெய்ய முடியாத சமூக இழப்பினை ஏற்படுத்தும் மாபெரும் சவாலாகும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூரில், உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களில் ஏற்றுமதியாளர்களுக்கு 15,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கட்டாய உற்பத்திக் குறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, புதிய ஆர்டர்களும் கவலை அடையும் அளவிற்குக் குறைந்து வருவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் 60 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுவதாகவும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

வேலையிழப்பு அபாயம்

தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரியின் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் இலாபத்தினைக் குறைத்து, தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக பெருமளவில் தள்ளுபடிகளை வழங்கிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இது அவர்களின் போட்டித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளதாகவும், ஏற்கெனவே இந்தத் துறைகள் பணி இழப்புகளையும், ஊதிய ஒத்திவைப்புகளையும் சந்தித்து வருகின்றன என்றும், இது சமூகத்தில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி அச்சுறுத்துவதாகவும் அவர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

கைமாறும் ஒப்பந்தங்கள்

இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், சர்வதேச இறக்குமதியாளர்கள், தங்களது ஆர்டர்களை, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலுள்ள போட்டியாளர்களிடம், அங்கு வரிவிதிப்பினால் கிடைக்கும் நன்மையைக் கருத்தில் கொண்டு விரைவாக வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதன் காரணமாக, சர்வதேச சந்தை வாய்ப்புகளை இழந்து, மீண்டும் வாய்ப்புகளைத் திரும்பப் பெறுவது என்பது பெருத்த சவாலாக இருக்கும் என்றும், இது நமது இளைஞர்களின், குறிப்பாக பெண்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலான, நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், இந்திய-அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைவான தீர்வின் மூலமாக நமது ஏற்றுமதியாளர்களின் வணிக நிலையை மீட்டெடுப்பதோடு, உலக அளவில் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்திட இயலும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே, நிலையான வர்த்தகத்தை வளர்த்தெடுப்பதற்கும், உள்நாட்டு தொழில்கள் மற்றும் வேலைகளைப் பாதுகாப்பதற்கும் இந்தியப் பிரதமர் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் மீது நம்பிக்கையுடன் இருப்பதால், அமெரிக்க வரிவிதிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்”

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எல்லாமே ஏமாற்று வேலை தானா..? ஜனவரியில் ஓய்வு பெற்ற 5000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? அன்புமணி கேள்வி
நம் தேசத்திற்கு எதிரானவர் உதயநிதி..! பியூஸ் கோயல் கடும் குற்றச்சாட்டு