
மானாமதுரை,
மானாமதுரையில் எத்தனை சதவீதம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன, அகற்றப்படாதது எத்தனை சதவீதம் என்று நீதித்துறைக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு உள்பட்ட மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்பட 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துச் சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என்றும், மேலும் சீமைக்கருவேல மரங்களை அகற்றியதற்கான அறிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாக அளவில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
மானாமதுரை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நீதித்துறைக் குழு நடத்தும் ஆய்வுக்கூட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆய்வுக்குழுவின் ஆணையர்கள் உதயக்குமார், சிவசங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல் மானாமதுரை நீதிமன்றம் மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார், தாசில்தார் சிவகுமாரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்தபின் நீதித்துறை குழுவினர் மானாமதுரை பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதா, அகற்றப்படாமல் உள்ளதா என்பது குறித்து உயர்நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட நீதித்துறை குழு ஆய்வு மேற்கொண்டது.
மேலும் ஊராட்சி, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம், எத்தனை சதவீதம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும், அகற்றப்படாதது எத்தனை சதவீத மரங்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.
மேலும் விரைவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஒத்துழைப்பு தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.