
சிங்கம்புணரி,
சிவங்கங்கையில், ஏ.டி.எம்கள் இரண்டு மாதங்களாக பூட்டிக் கிடக்கும் நிலையில், பணம் எடுக்க கட்டுப்பாட்டைத் தளர்த்தி என்ன பயன் என்று பாதிக்கப்பட்ட பொதுசனம் கேள்விக் கேட்டார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் குறைந்தளவிலே செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மதிப்பு நீக்கம் காரணமாகவும், பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் பெரும் பாடுபட்டனர்.
தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் விடப்பட்டன. இதனால் பணப்பிரச்சினை ஓரளவிற்கே சரியாகியுள்ளது.
இந்த நிலையில் சிங்கம்புணரியில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் புது வருடம் பிறப்பதற்கு முன்பிலிருந்து, பணம் இல்லை என்ற வாசகத்துடன் பூட்டியேக் கிடக்கிறது.
இதனால் சிங்கம்புணரி மக்கள், தங்களது தேவைக்கும் மட்டுமின்றி அவசரத்துக்கு கூட பணம் எடுக்க முடியாத அவல நிலையில் இருக்கின்றனர். மேலும் அவர்கள் பணம் எடுப்பதற்கு சுமார் 10 கி.மீ. தூரமுள்ள திருப்பத்தூர், காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதுகுறித்து சிங்கம்புணரியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் கூறியது:–
“சிங்கம்புணரியில் பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஒருசில வங்கிகளில் மட்டுமே ஏ.டி.எம். மையங்கள் செயல்படுகிறது. அந்த ஏ.டி.எம். மையங்களும் இரண்டு மாதங்களாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எப்போதாவது ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் மட்டும் பணம் வைக்கப்படுகிறது. இந்த மையமும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படும் என்பதால் பணம் விரைவிலேயே தீர்ந்துவிடும். இதனால் பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே சிங்கம்புணரி வழியாக பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரைச் செல்கின்றனர். அவர்களும் தங்களது தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
ஏ.டி.எம்களில் கட்டுப்பாடின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று மோடி அறிவித்தது நல்லதுதான். ஆனால், ஏ.டி.எம் திறந்தால் தானே காசு எடுக்க முடியும். மூடிக்கிடக்குற ஏ.டி.எம்க்கு கட்டுப்பாட்டை தளர்த்தி என்ன பயன்?
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மூடிக்கிடக்கும் ஏ.டி.எம்களில் பணத்தை நிரப்பி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.