
கல்விக்கு முக்கியத்துவம்- தமிழக அரசு நடவடிக்கை
தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் உதவித்தொகை திட்டமானது செயல்படுத்தப்படுகிறது அந்த வகையில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் புதுமை பெண் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள். இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தமிழ் புதல்வன் திட்டம்
கோவையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து மாணவர்கள் கல்வி பயில உருவாக்கிய திட்டம். இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு நேற்று இரவே வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்க உத்தரவிட்டு விட்டேன். முதலமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்தே பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்திற்கு தான். "அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் - இதுதான் என்னுடைய கனவு"
மாணவர்களின் கல்விக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அதற்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட, நான் அதிகம் வைத்துள்ளேன். உங்கள் வெற்றிக்கு பின்னால் என்னுடைய திராவிட மாடல் இருக்கிறது. மறந்துவிட வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.