
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணம் மதுரை வந்தடைந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற நடைபயணத்தின் போது தெப்பக்குளம் பகுதியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ்மொழி பயில வேண்டும் என மோடி கூறினார். திருக்குறளையும், ஆத்திசூடியையும், மேற்கோள்காட்டி பேசியிருக்கிறார். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் என மாணவர்களிடம் குறிப்பிட்டார். 5ஆம் தமிழ்சங்கம் என குறிப்பிட்டால் அதற்கு காரணம் மோடி என குறிப்பிடலாம். தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் திமுக பேனா சிலை வைக்கிறது ஆனால் தமிழை வளர்க்க எந்த முயற்சியும் இல்லை. எந்த நிதியும் ஒதுக்கவில்லை. கடந்த கல்வி ஆண்டில் 54ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். 1967ஆம் ஆண்டில் இருந்து 5 முறை ஆட்சி செய்தார்கள் இதுதான் தமிழ்வளர்க்கும் லட்சணமா?” என கேள்வி எழுப்பினார்.
மோடி எங்கே குடியிருக்கிறார் என தெரியுமா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, “எங்கெல்லாம் மோடியின் திட்டங்கள் உள்ளதோ அங்கெல்லாம் மோடி குடியிருக்கிறார். வீடு தேடிவந்து மத்திய அரசின் திட்டங்களை கொடுத்துள்ளோம். டிஆர் பாலு, 2 ஜிராஜா, கனிமொழி போன்ற முகவரிகள் எங்களுக்கு இல்லை. திட்டம் வேண்டும் என்று சொல்பவர்கள்தான் எங்களின் முகவரி.” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “100 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம், 87 கோடி பேனா சிலை அமைக்கிறார்கள். 100 கோடி நூலகத்திற்கு ஒட்டடை அடிக்க 2 கோடி ரூபாய் டெண்டர் விட்டு அதிலும் கொள்ளையடிப்பார்கள். திமுக ஆட்சியில் கட்டுவது எல்லாமே கொள்ளையடிப்பதற்குதான். மோடி பெயரில் எந்த திட்டமும் இல்லை. பிரதமர் என்ற பெயரில் இருக்க வேண்டும் என விரும்பி திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளார். 2 ஆண்டில் 1.45லட்சம் கோடி கூடுதலாக திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. திமுக அரசு கடன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர்.” என்றார்.
“நெஞ்சுவலி வந்து ஒரு அமைச்சர் புழல் சிறையில் தூங்குகிறார். எந்த வேலையும் செய்யாமல் அமைச்சர் சம்பளம் வாங்குகிறார். ஊழல் செய்த அமைச்சருக்கு ஊதியம் கொடுக்கிறார் என்றால் முதலமைச்சரும் குற்றவாளிதான்.” என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். அமைச்சரின் ஊழல் உறுதி செய்யப்படும், திமுக அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வைத்து ஒரு நாளில் தமிழகத்தின் கடனை கட்டிவிடலாம் எனவும் அவர் கூறினார்.
“அரசு பள்ளி ஆசிரியர், அரசு மருத்துவமனை செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. 30 சதவித கமிசன் கொடுத்தால்தான் புதிய தொழிற்சாலை தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. அதனை சபரீசனிடம் கொடுக்க வேண்டும். உதயநிதி, சண்முகராஜ் ஆகியோரிடம் கமிசனை கொடுக்க வேண்டும். அதனால் தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். நாம் டிஎம்கே பைல்ஸ் வெளியிட்டதால் சபரீசன் இங்கு இருப்பதில்லை வந்துவிட்டு உடனே லண்டன் சென்றுவிடுகிறார். பாக்ஸ்கான் தமிழகத்திற்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் ட்வீட் போட்டார் ஆனால் சில நாட்களிலயே பாக்ஸான் கம்பெனி கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதால் ட்விட்டர் பதிவை டெலிட் செய்துவிட்டார்.” என்றும் அண்ணாலை தெரிவித்தார்.
டாஸ்மாக் குறித்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் 52 லட்சம் கேஸ் மதுபானம் விற்பனையகிறது, இதில் 40 சதவிதம் கேஸ் விற்பனை ஜெகத்ரட்சகன், டிஆர்பாலுவுடையதுதான். டாஸ்மாக் விற்பனை 1லட்சத்து 10ஆயிரம் கோடி. இதில் 44 ஆயிரம் கோடி வரிதான். சாராய ஆலைகளுக்கு ஒரு வருடத்திற்கு 25ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. லண்டன் மாநகர் போல 24 மணி நேரமும் மதுகடை பார் திறந்துள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை 24 மணி நேரமும் மது குடிக்க வைக்கிறார்கள். எங்களுக்கு குடிகாரர்கள் மீது கோபம் இல்லை, குடிக்க வைக்கும் அரசு மீது தான் கோபம். குடிக்க வேண்டுமென்றால் குடியுங்கள் அதற்குத்தான் கள்ளுக்கடை திறந்துவைக்கிறோம் என்கிறோம். டாஸ்மாக்கில் வருவது இந்தியன் மேட் பாரின் எரி சாராயம்தான் அதனை குடித்தால் குடல் வெந்துவிடும். லோக்கல் ரேட்ல, லோக்கல் பிராண்டல லாபத்திற்காக திமுகவினர் ஏதையோ செஞ்சு விக்கிறாங்க. எரிசாரயம் குடித்தால் மரணம் நிச்சயம் வரும், ஒயின்ஷாப்பில் மதுபானத்தில் குவாலிட்டி செக் இல்லை அதனால் தரமற்ற சாராயம் விற்கப்படுகிறது.” என குற்றம் சாட்டினார்.
“தமிழகத்தில் திமுக ஆட்சியில் பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை அனைத்தையும் நாசப்படுத்திவிட்டனர் ஆனால் முதலமைச்சருக்கு என்ன நடக்குதே என்பதே தெரியவில்லை. கர்நாடகாவில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். எதிர்கட்சி கூட்டம் போட்டபோது ஏன் வாயை மூடிக்கொண்டு இருந்தீர்கள்? தனி நாடு கேட்டவன் எல்லாம் இந்தியா கூட்டணி வைத்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகத்திற்கு ராகுல் வந்தால் மாஸ் என்பார்கள், கேரளா சென்றால் வேஸ்ட் என்பார்கள்.” என்று அண்ண்ணாமலை கூறினார்.
“திமுக என்றாலே, அ -அக்கிரமம், ஆ -ஆக்கிரமிப்பு, இ - இரட்டை, உ -உருட்டு, ஊ- ஊழல், எ -எகத்தாளம், ஏ - ஏமாற்றுவது. இதில் இருந்த பாதுகாப்பதுதான் இந்த யாத்திரை. 2026ஆம் ஆண்டில் மே மாதம் எய்ம்ஸ் நிச்சயம் வரும். இந்தியாவில் இருப்பதால் தமிழகத்தின் கடனை மோடி ஏற்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்வார் அதனை ஏற்காவிட்டால் மோடி தமிழகத்தின் எதிரி என்பார்கள்.” என்றும் அண்ணாமலை அப்போது பேசினார்.