
Indian rupee symbol தமிழகத்தில் மும்மொழியை அமல்படுத்த மத்திய அரசு அழுத்தும் கொடுத்து வருகிறது. அதே நேரம் பள்ளி பாட திட்டங்களில் இந்தி மொழியை சேர்க்க தமிழக அரசு மறுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரவேண்டிய 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த பிரச்சனைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திமுக- பாஜக இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்மொழி கொள்கை- தமிழகம் எதிர்ப்பு
இந்த நிலையில் பட்ஜெட்டில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே அதன் தாக்கம் வெளியாகியுள்ளது. இதன் படி பட்ஜெட் தொடர்பான விளம்பரத்தில் எப்போதும் இந்திய ரூபாயின் குறியீடான தேவநாகரி எழுத்தில் உள்ள ₹ இடம்பெற்றிருக்கும். ஆனால் அது தற்போது மாற்றப்பட்டு 'ரூ' இலச்சினை இடம்பெற்றுள்ளது. இது பல்வேறு தரப்பிலும் விவாதமாகியுள்ளது.
₹ பதிலாக 'ரூ' இலச்சினை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில் தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக 'ரூ' இலச்சினை பயன்படுத்தி அறிமுகம் செய்துள்ளார். மேலும் ; 'எல்லார்க்கும் எல்லாம்' என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை
இது அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரானது என ஒரு சிலர் கூறி வரும் நிலையில், நமது ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள 15 அலுவலக மொழிகளின் ஒன்றான தமிழ் மொழியை முதல்வர் உபயோகித்து உள்ளார். இது, தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது. இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.