கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

By SG Balan  |  First Published Jun 15, 2023, 8:47 AM IST

கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பதில் வராததால் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினே திறந்து வைக்கிறார்.


சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய இந்த மருத்துவமனை மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியுள்ளது. தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ளன.

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பன்னோக்கு மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் - இரைப்பை, புற்றுநோய் ஆகிய மருத்துவப் பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை துறைகள் இருக்கின்றன.

Tap to resize

Latest Videos

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்

ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த மருத்துவமனையைத் திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். முதலில் ஜூன் 5ஆம் தேதி மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் பின்னர் குடியரசுத் தலைவர் செர்பியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவரிடம் மாற்றுத் தேதியை பெற்று ஜூன் 15ஆம் தேதி மருத்துவமனை திறக்க விழா நடந்த தமிழக அரசு முயற்சி செய்தது. ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இதுவரை தேதி ஒதுக்கப்படவில்லை.

இதனால், கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மருத்துவமனையின் திறப்பு விழாவை முன்னிட்டு மருத்துவமனை கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

10 லட்சம் வாக்குச்சாவடிகளின் பாஜக ஊழியர்கள் முன் பிரதமர் மோடி உரை

click me!