
வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம்
நெல்லை சத்திர புதுக்குளத்தில் 1928 ஆம் ஆண்டுபிறந்த சுப்பு ஆறுமுகம், தனது வில்லுப் பாட்டின் மூலமாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மீகம், தேச பக்தியை வளர்த்தவர். தனது 14-வது வயதில் குமரன் பாட்டு கவிதை தொகுப்பு மூலமாக பிரபலமடைந்தார். இந்தநிலையில் வயது முதிர்வின் காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சுப்பு ஆறுமுகம் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள், அரசியில் கட்சி கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற வில்லிசைப் பாட்டுக் கலைஞர் 'பத்மஸ்ரீ' சுப்பு ஆறுமுகம் (93) அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வேதனையடைகிறேன். இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று "வில்லிசை வேந்தர்" எனப் போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.
முதலமைச்சர் இரங்கல்
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அவர் செய்துள்ளார். மூத்த கலைஞரான திரு. சுப்பு ஆறுமுகம் அவர்களின் இழப்பால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லிசையின் மாபெரும் கலைஞர் பதம்ஶ்ரீ கலைமாமணி திரு சுப்பு ஆறுமுகம் அய்யா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது இறப்பு கலை உலகிற்கும் தமிழ் உலகிற்கும் மிகப் பெரிய ஒரு இழப்பு. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்