
தி.நகரின் பிரமாண்ட கடையான சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த புகை மண்டலத்தின் ஸ்கை வியூ புகைப்படம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சிலக்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நேற்று முழுவதும் தீயை அணைக்க போராடி வந்தனர்.
ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை திடீர் என இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்த பகுதியில் சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். இடிந்த நிலையில் உள்ள மீதி கட்டடத்தை இடிப்பது குறித்து பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் கட்டடத்தின் உட்பகுதி இன்னும் எரிந்து வருகிறது.
தி.நகரில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலாமாக காட்சி அளிக்கிறது. விமானத்தில் செல்லும் பயணிகள் கூட தி.நகரின் புகை மண்டல கட்சியை புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.