
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியின் ஆதரவாளர்களும் பல்வேறு வகையில் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த வரிசையில், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை, பிரதமர் மோடியின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகிறார்.
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற இரண்டாம் ஆண்டு முதல், ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார். இந்த ஆண்டும், மோடியின் 12-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
இன்று காலை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கராத்தே தியாகராஜன் மற்றும் மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏழுமலையின் கடைக்கு வருகை தந்தனர். ஏழுமலையின் இந்த முயற்சிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். அப்போது, தமிழிசை சௌந்தரராஜன் தானே டீ போட்டு பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி ஏழுமலை கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து இலவசமாக டீ வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இது பிரதமர் மீது அவர் கொண்டுள்ள பற்றையும், அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.