
இந்தியாவில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் பதிவாகியுள்ளதில் டெல்லி முதலிடத்திலும், சென்னை கடைசி இடத்திலும் உள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரம் என்ற பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது
டெல்லி, மும்பை, சென்னை உள்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்துள்ளன.
75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13,808 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன. அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கடைசி இடத்தில் இருக்கும் சென்னையில், 43 லட்சம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 544 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, 1 லட்சம் பெண்களில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளன. இதையடுத்து பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.