
திருப்பூர்
திருப்பூரில் திறந்துகிடந்த அம்மன் கோவிலுக்குள் புகுந்து தங்கத் தாலி, நகைகள், வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பி.என்.சாலை போயம்பாளையம் அருகே நேருநகரில் சௌடேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் இந்தக் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார்.
தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில் நடை நாள்தோறும் அதிகாலையில் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் வழிபாடுகள் முடிந்ததும் வழக்கம்போல கோவிலை பூட்டிவிட்டு ராம்குமார் தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.
மார்கழி மாத வழிபாட்டுக்கு அதிகாலையிலேயே அடியார்கள் கோவிலுக்கு வரத்தொடங்குவார்கள் என்பதால், நேற்று அதிகாலை கோவிலை திறந்து வைத்துவிட்டு, அருகில் உள்ள தனது வீட்டிற்கு ராம்குமார் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து கோவில் கருவறைக்குள் சென்றபோது, அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த இரண்டு சவரன் தாலி, நான்கு தங்க காசு, கம்மல் மற்றும் அங்கிருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராம்குமார் உடனே இதுபற்றி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதற்குள் கோவிலில் தங்க நகை - வெள்ளி பொருட்கள் கொள்ளைபோன தகவல் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த அடியார்கள் வரை பரவியதால் அனைவரும் கோவில் முன்பு திரண்டனர்.
காவலாளார்கள் விசாரணையில், கோவில் திறந்திருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள், கோவில் கருவறைக்குள் நுழைந்து தங்க நகை -வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.