
தூத்துக்குடி
பயிர்களுக்கு காப்பீடு தொகை செலுத்தியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தராததால் தூத்துக்குடியில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
எப்போதும் வென்றான் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மானாவாரி பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தியும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் கடந்த ஆண்டு பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
எனவே, "உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வழங்கும் நிவாரண தொகையை விரைந்து பெற்றுத்தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேசிய விவசாய சங்கத்தினர் இந்த தர்ணா போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு எப்போதும் வென்றான் பகுதி அமைப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் நம்பிராயரிடம் மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்தப் போராட்டத்தில் எப்போதும் வென்றான் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.