
கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று அவசர வழக்காக தொடரப்பட்டிருந்தது. மனுவில், கோவை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தான் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றிருந்ததாகவும், ஆனால் நடைபெற்ற தேர்தலில் பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் பட்டுவாடா அதிகளவில் நடைபெற்றதாகவும், பாகுபாடு இன்றி அனைத்து கட்சியினரும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், எனவே கோவை மாநகராட்சி தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் முறைகேடுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதுவரை வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் முடிவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்து இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.