
தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில் வி10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சாரணையைத் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யச் சொல்லி வார்டன் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், மதமாற்றம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரியை போலீஸார் கைது செய்தனர்.
மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் எனக்கூறி பாஜகவினரும் இந்து அமைப்பினரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக்குழுவினரும் தஞ்சாவூருக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட எஸ்பி, கூடுதல் ஆட்சியர், கல்வி அதிகாரி, பிரேதப்பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். இதனிடையே, தனது மகள் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, சென்னை சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், மாணவி படித்த விடுதி மற்றும் பள்ளியில் இன்று விசாரணையைத் தொடங்கினர். விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் பள்ளிச் சுற்றுப்புற பகுதிகளையும் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு, விடுதி தரப்பிலும் விசாரித்து வருகின்றனர்.