சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி தள்ளி வைப்பு!

By Manikanda PrabuFirst Published Dec 5, 2023, 5:20 PM IST
Highlights

புயல் மழை காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், தீவிரப்புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. முன்னதாக, மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்ததால் கனமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலைநகர் சென்னையில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, பேருந்து, ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சரிந்து விழுந்தன. நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படுகின்றன.

Latest Videos

மழை வெள்ள மீட்பு பணிகளில் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வருகிற 9, 10ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவிருந்தது. சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 50 வாக்குகள் கூட வாங்கவில்லை: கமல்நாத் கேள்வி?

தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையவுள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகம் மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வந்தது. மேலும், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில், தற்போது மழை மீட்பு பணிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

click me!