
விமான நிலையம் போன்று சென்னையில் அதி நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டி.ஏ.)திட்டமிட்டுள்ளது.
88 ஏக்கரில் அமைய உள்ள இந்த புதிய பேருந்து நிலையம், ஊரப்பாக்கம் அருகே, கிளம்பாக்கத்தில் அமைய உள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ விமானத்தில் செல்ல விமான நிலையம் வருபவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் செல்வார்கள் அல்லது தனியார் விமானத்தை தேர்வு செய்து அதில் பயணிப்பார்கள். அதுபோல், இந்த புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் மக்கள் தனியார் அல்லது அரசு பஸ்களில் எதை வேண்டுமானாலும் ேதர்வு செய்து பயணிக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.
கோயம்பேட்டில் தற்போது இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. ஒன்று அரசின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 2-வது, தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களால் நடத்தப்படும் பேருந்து நிலையமாகும். இந்நிலையில், இரு பஸ்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் கிளம்பாக்கத்தில் புதிய நவீன பேருந்து நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமானநிலையம் போன்று, பயணிகளை வழி அனுப்ப உடன் வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். அதேபோல, இந்த புதிய நவீன பேருந்து நிலையத்திலும், பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். பயணிகளின் அனைத்து உடைமைகளும், பெட்டிகளும் ஸ்கேனிங்செய்யப்பட்டு அனுப்பப்படும்.
கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மாதவரம், கிளம்பாக்கத்தில் இரு பேருந்து நிலையங்களை அமைக்க அரசு அறிவித்து இருந்தது. மாதவரத்தில் இருந்து வட மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் புறப்படும் விதமாகவும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தபஸ்கள் கிளம்பாக்கத்தில் இருந்து புறப்படும் விதமாக திட்டமிடப்பட்டது.
இதில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்காக 88 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அதில் 30 ஏக்கர் நிலம் தொல்லியல் ஆய்வுத்துறையின் இடத்துக்கு அருகே வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் 2,200 அரசு பஸ்களும், 500 ஆம்னி பஸ்களும் இயக்க முடியும்.