
ஈரோட்டில் திமுக வெற்றி
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இரண்டு முறை இடை தேர்தலை சந்தித்துள்ளது. திருமகன் ஈவேரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவின் காரணமாக இடைத்தேர்தலை இந்த தொகுதி சந்தித்தது. இந்த தேர்தலில் திமுக சார்பாக சந்திரகுமார் போட்டியிட்ட நிலையில், அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்தது. நாம் தமிழர் கட்சி மட்டுமே தேர்தலை சந்தித்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார்.
நன்றி தெரிவித்த சந்திரகுமார்
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்ற நிலையில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் பெரியார் அண்ணா கலைஞர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்த பின் வாக்காளருக்கு நன்றி தெரிவித்து பேசினார். இத்தேர்தலில் முதல்வரின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் பெருவாரியாக திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியின் சேவைகளுக்காகவும் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது என கூறினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் மனுக்கள் அளித்ததாகவும்,
அதிமுக வாக்கு திமுகவிற்கு வந்தது
அந்த மனுக்கள் மீது இன்னும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் இந்த தொகுதியில் உள்ள நீண்ட நாட்கள் பிரச்சனைக்கு ஓராண்டுக்குள் தீர்வு எட்டப்படும் என கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி போலி என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியவர், அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் இவ்வாறு போலி வெற்றியை அதிமுக பெற்றிருக்கலாம். ஆனால் எனது வெற்றி உண்மையானது என கூறினார். இந்த தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுகவின் 75 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளது எனவும் எனவே போலி என்பது நிராகரிக்க கூடியது என சந்திரகுமார் கூறினார்.