உச்சநீதிமன்றத்திற்கு சவால் விடுவதா? ஆளுநர் வழக்கில் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கண்டனம்!

Published : May 15, 2025, 01:47 PM IST
mk stalin

சுருக்கம்

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவரின் வழியே விளக்கம் கேட்டுள்ள ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவரின் வழியே விளக்கம் கேட்டுள்ள ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்: தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் மூலமாக, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பா.ஜ.க.வின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சிறுமைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு நேரடி சவால்

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும், இது சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருள்கொள்வதில் இறுதித் தீர்ப்பளிக்கும் உரிமைகொண்ட உச்சநீதிமன்றத்துக்கும் நேரடியாகச் சவால் விடுகிறது.

*ஆளுநர்கள் முடிவெடுக்கக் காலநிர்ணயம் செய்யப்படுவதில் எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்?

*சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, ஆளுநர்களின் முட்டுக்கட்டையை பா.ஜ.க. சட்டபூர்வமாக்க முயல்கிறதா?

*பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டமன்றங்களை ஒன்றிய அரசு முடக்க எண்ணுகிறதா?

ஒன்றிய அரசுக்கு அடுக்கடுக்காக கேள்வி

மிக முக்கியமான கட்டத்தில் நமது நாடு நிற்கிறது. உச்சநீதிமன்றத்தின் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டமன்றங்களைத் திறனற்றதாக்கவும் நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால், மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜ.க. அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!