
வேலூர்
தமிழக மாணவ, மாணவிகளுக்கு வெளி மாநிலத்தில் ‘நீட்’ தேர்வு மையம் அமைத்து சி.பி.எஸ்.இ. செய்த குளறுபடியால் மத்திய அரசை, தமிழக அரசியல் கட்சியினர் குறை கூறுகின்றனர் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேலூருக்கு வந்திருந்தார்.
நேற்று காலை ‘நீட்’ தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வு மையத்திற்கு அவர் சென்றார். ஆனால், அதற்குள் மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து அவர் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக தெரிவித்தார். அப்போது பெற்றோர் சிலர் ‘நீட்’ தேர்வு பாட திட்டத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம், "‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களின் விருப்பத்தின் பேரிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 இலட்சத்து 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும்.
அடுத்தமுறை எவ்வளவு மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினாலும், தமிழகத்திலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும். இந்த முறை சி.பி.எஸ்.இ. அதிக கவனத்துடன் செயலாற்றியிருக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ. செய்த குளறுபடியால் மத்திய அரசை, தமிழக அரசியல் கட்சியினர் குறை கூறுகின்றனர். வெளி மாநிலம் சென்று ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை மிகவும் குறைவு. மாணவர்களின் பயணச்செலவு உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘நீட்’ தேர்வு மையம் அமைத்தது தொடர்பான பிரச்சனைக்கு சி.பி.எஸ்.இ. தலைவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
தற்போதைய அரசியல் தலைவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. இளைஞர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைப்பது அவர்கள்தான். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்கள் பேச வேண்டும். ‘நீட்’டால் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை.
காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பதை ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் கர்நாடக அரசிடம் ஏன் கேட்கவில்லை? காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க.வினர் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்தாலே மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்.
தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியில் நீர் மேலாண்மை முக்கியமானதாக இருக்கும். திரைப்படங்களில் நடக்காததைத் தான் வசனங்களாக பேசுவார்கள். அப்படிதான் கமல்ஹாசன் ஆட்சிக்கு வந்தால் காவிரி வரும் என்று ஸ்ரீபிரியா கூறி உள்ளார்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து வேலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வேலூர் பழைய மாநகராட்சி அருகே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.