
கோவையில் வங்கிப் பணம் 65 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்.பாலாஜி, என்.அசோக்குமார், வி.நாகேந்திரன் மற்றும் மனோகரன். இந்த நான்கு பேரும் கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியில் சுமார் 65 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
ஆனால் பணத்தை திரும்ப அளிக்காததால் இவர்கள் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு கடந்தாண்டு மாற்றப்பட்டது.
இதற்கிடையே இன்று பிற்பகலில் கோவை பெரிய கடை வீதியில் இருக்கும் அசோக்குமார் மற்றும் பாலாஜி ஆகியோருக்குச் சொந்தமான நகைக்கடையில் மத்திய புலனாய்வுத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தெலுங்குபாளையம் பாரதி சாலையிலுள்ள சுபலாவண்யா நகைக்கடையிலும், கிராஸ்கட் சாலையிலுள்ள ஸ்வர்ணலட்சுமி நகைக்கடையிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது. மேலும் சென்னையிலும் புலனாய்வுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.